ஜனவரி 1 முதல் இது கட்டாயம்.. மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து
புத்தாண்டு முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் விதிமுறை அமலுக்கு வருகிறது. அதுக்குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்
2025-ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஹெல்மெட் விதிமுறைகளை வாகன ஓட்டிகளுக்கு கடுமையாக அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுக்குறித்து அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசும், சாலைப் பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்றக் குழுவும் கடந்த காலங்களில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும், பின்னே செல்பவர்களுக்கும் ஹெல்மெட் விதியை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டிருந்து. ஆனால் அந்த விதி அமல்படுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
2019 ஆம் ஆண்டில், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் முடிவை, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் நிறுத்தி வைத்தது. நீதிமன்றம் விதித்துள்ள விதியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு விரும்புவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது செல்போன் பேசுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக செல்வது போன்றவை உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த நிலையில் புதுச்சேரியில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஹெல்மெட் கட்டாயமாகிறது.
ஹெல்மெட் விதிமுறைகளை மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவிப்பு. மேலும் வாகனம் ஓட்டுபவருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை பல்வேறு போக்குவரத்து சந்திப்புகளில் போலீசார் நடத்த உள்ளனர். மேலும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிவதை ஊக்குவிப்பதும், ஹெல்மெட் அணிந்து செல்பவர்களை பாராட்டுவதும் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, யூனியன் பிரதேசத்தில் பதிவான மொத்த விபத்து வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை. புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டில் பதிவான 1,013 விபத்துக்களில், 580 இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானது.