Hero Motocorp அசத்தலான மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது!! அதிரடி டீசர் ரிலீஸ்!!
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், நாட்டில் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான முழு முனைப்புடன் உள்ளது. நிறுவனத்தின் பத்து வருட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பில், நிகழ்வின் கடைசி சில நிமிடங்களில் ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முன்ஜால் ஒரு மின்சார ஸ்கூட்டருடன் காணப்பட்டார். இந்த மின்சார வாகனத்தைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தாமல், வாகனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மட்டும் அவர் கூறினார்.
ஸ்கூட்டரின் தோற்றத்திலிருந்தே, இது ஒரு வளைந்த உடல் வடிவமைப்பு, விசாலமான இருக்கை அமைப்பு, முன்பக்கத்தில் 12 அங்குல சக்கரம், பின்புறத்தில் 10 அங்குல சக்கரம், எல்இடி டெயில் விளக்கு, விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஒரு தட்டையான ஃபுட்போர்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது. அதற்கு சற்று முன்னர் ஹீரோ மோட்டோகார்ப் ஸ்கூட்டரின் டீஸர் வெளியாகியுள்ளது. முன்னதாக, மின்சார வாகன உற்பத்தித் துறையில் முழு முனைப்புடன் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் சிஎஃப்ஓ நிரஞ்சன் குப்தா கூறியதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்தது.
'2022 நிதியாண்டில் மின்சார வாகன தயாரிப்புகளில் ஒன்றை நாங்கள் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறோம். அது எங்கள் சொந்த தயாரிப்பாகவோ அல்லது ஸ்வாப் பிராடெக்டாகவோ இருக்கும். இவை அனைத்தும் அடுத்த காலண்டர் ஆண்டில் நடப்பதைக் காண்பீர்கள்’ என்று குப்தா கூறினார்.
இந்த பிரிவில் நுழைய, ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட்அப் ஏதர் எனர்ஜியில் முதலீடு செய்துள்ளது. ஏதர் எனர்ஜி ஏற்கனவே மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, தாய்வானை தளமாகக் கொண்ட கோகோரோ இன்க் உடனும் நிறுவனம் இணைந்துள்ளது. கோகோரோவின் பேட்டரி பரிமாற்ற தளத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இந்த இணைப்பு உதவும்.