ஜோஹன்னஸ்பர்க் - தோஹா வழியாக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் இந்தியாவுக்கு கடத்தல்
கத்தார் ஏர்வேஸ் விமானம் 528 இல் ஒரு தான்சானிய ஆணும் பெண்ணும் சென்னைக்கு வந்தனர். பெங்களூருக்கு நேரடி விமானம் கிடைக்காததால், அவர்கள் இருவரும் ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்து தோஹா வழியாக இந்தியாவுக்கு வந்தனர்.
பெங்களூரில் சிகிச்சை எடுப்பதற்காக பெண் இந்தியாவுக்கு வந்தார். பெங்களூரு மருத்துவமனை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசாவில் அவரது ஆண் உதவியாளரும் சென்னைக்கு வந்தார்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (டிஆர்ஐ) கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையின்போது இருவரும் மிகவும் பதட்டமாகத் இருந்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விசாரணையில் முரணான தகவல்களை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்களது பொருட்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
உடைகள் மற்றும் தனிப்பட்ட உடமைகளை வெளியே எடுத்த பிறகும், சூட்கேஸ்கள் மிகவும் கனமாக இருந்தன. சூட்கேஸ்களை முழுமையாக ஆராய்ந்தபோது, டிராலி கம்பிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், சூட்கேஸின் ஷெல்லுடன் கச்சிதமாக ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இப்படி மறைக்கப்பட்டிருக்கும் ஹெராயினை மோப்ப நாய்கள் கூட கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு டிராலி சூட்கேஸிலிருந்தும் ஐந்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. சோதனையில், 15.6 கிலோ வெள்ளை ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. என்.டி.பி.எஸ் சட்டம் 1985 இன் கீழ் (NDPS Act 1985, with Customs Act) 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.