மரியாதை கேட்காமலே கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!
1. உதவுதல்-
பிறருக்கு தேவையான விஷயங்களின் அடிப்படையில் வழிகாட்டலாம், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கலாம். நீங்கள் உதவி செய்பவர்கள் சக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அவர்களிடம் உங்களின் அனுபவங்களையும், திறன்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் இந்த ஆதரவு அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். இதன்மூலம் உங்கள் மீதான நம்பிக்கையும் அவர்களிடத்தில் அதிகரிக்கும்.
2. வேண்டாம் என்பதில் தெளிவு - உங்களுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதில் தெளிவு வேண்டும். குறிப்பாக வேண்டாம் என்பதை சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்.
வருகிறேன், வாங்குகிறேன் போன்று ஏதாவது சொல்லிவிட்டு அதனை செய்யாமல் இருந்தால், மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பை குறைத்துவிடும். சொன்னதை செய்யும்போது பிறர் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு அதிகரிக்கும்.
3. நன்றியுணர்வு -
மற்றவர்கள் உங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு நீங்கள் உடனே சிறிய நன்றியை தெரிவித்துவிட வேண்டும். உங்களின் நன்றியுணர்வு அவர்கள் உங்களுக்கு செய்த உதவிக்கு மதிப்பளித்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்திவிடும். இது உங்கள் மீதான அன்பையும் மதிப்பையும் மேலும் கூட்டும்.
4. மரியாதையான உரையாடல்-
சிலர் சங்கடமான உரையாடல்கள் எழும்போது தவிர்த்து விட்டு செல்லவே விரும்புவார்கள். ஆனால் அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு மரியாதையுடனும், கன்னியமாகவும் பேசுகிறீர்கள் என்பது முக்கியம். அதனைப் பொறுத்து உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் விஷயங்கள் மீதான நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.
5. பொறுப்புடன் நடத்தல் -
எந்த இடத்திலும் பொறுப்பை உணர்ந்து நடப்பது என்பது தான் உங்கள் மீதான மதிப்பை காட்டும். மற்றவர்களிடத்தில் உங்கள் மீதான நம்பகத்தன்மையும் அதிகரிக்கும். தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள், அதனை திருத்துவதற்கும் தயாராக இருங்கள்.
உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கும்போது, மற்றவர்கள் அதனை பார்த்து உங்கள் மீதான நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வார்கள். இது மரியாதையையும், மதிப்பையும் பெற்றுக் கொடுக்கும்.