பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!
ஒருவரை, இன்னொருவர் அசிங்கப்படுத்துவது என்பது மிகவும் மரியாதை குறைவான செயலாகும். இந்த சூழ்நிலையை பலருக்கு கையாள தெரியாது. அந்த சமயங்களில் என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
நிதானம்:
ஒரு இடத்தில் அசிங்கப்படுத்த படும் போது, நமது கோபம், துக்கம் அல்லது ஏமாற்றத்தை உடனே வெளிப்படுத்திவிட கூடாது. ஒரு நிமிடம் நாம் பின்வாங்கி யோசனை செய்ய வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். பதில் பேசும் முன்பு நிதானமாக யோசிக்க வேண்டும்.
உங்களுக்கும் அந்த நபருக்குமான உறவு:
உங்களை அசிங்கப்படுத்தும் நபருக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று யோசியுங்கள். அது உங்களுக்கு முன் பின் தெரியாத நபராக இருந்தால் அவரிடம் எதை கூறியும் பிரயோஜனம் இல்லை. ஆனால், அவர் உங்களை அப்படி அடிக்கடி அசிங்கப்படுத்தும் நபராக இருந்தால் அவருடன் பேச்சு வைத்துக்கொள்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுங்கள்.
“இன்னொரு முறை சொல்லுங்க?”
ஒருவர் உங்களை அசிங்கப்படுத்தும் போது, அவர்களுக்கே தாங்கள் செய்தது தவறு என்று தெரியும். அப்படி அவர்கள் பேசிய பிறகு “மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள்” என்று கேளுங்கள்.
கேள்வி கேளுங்கள்:
அசிங்கப்படுத்தும் வகையில் ஒருவர் ஒரு வாக்கியத்தை கூறும் போது, “என்னை மரியாதை குறைவாக பேசி அசிங்கப்படுத்த நினைக்கிறீர்களா?” என்பதை கேள்வியாகவே கேட்டுவிடுங்கள். இது அவர்களை அதிர்ச்சியடைய செய்ய வைக்கும்.
தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்:
உங்களை ஒருவர் அசிங்கப்படுத்தி அதில் ஆதாயம் பெற நினைத்தால் அது அவரது பாதுகாப்பற்ற தன்மையை காண்பிக்கிறது. உங்களின் மதிப்பு என்ன என்பதை நீங்கள் அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும். எனவே, அவர் கூறுவதை மனதிற்கும் மூளைக்கும் கொண்டு செல்லாதீர்கள்.
எல்லை கோடு:
கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்து உறவுகளிலும், மக்களிடமும் எல்லை என்ற ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும். யாரேனும் உங்களிடம் வந்து உங்களை இழிவாக பேசுகையில் “இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்” என்பதை அவருக்கு தெளிவாக புரிய வைத்து விடுங்கள்.
தெளிவாக எடுத்துரைத்தல்:
உங்களை அசிங்கப்படுத்திய நபரை அமர வைத்து, “நீங்கள் இப்படி பேசியதால் எனக்கு இந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது” என்பதை நீங்கள் கூறலாம். அதற்கு உங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது.