நீரிழிவு, இதயநோய் ஏற்படுத்தும் உணவு பட்டியலை வெளியிட்ட ஐசிஎம்ஆர் - ஜாக்கிரதை
உண்மையை சொல்லப்போனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இந்த அறிக்கை சாதாரண மக்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை ஆகும். இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் சாப்பிடும்போது நாட்பட்ட அளவில் கேடு விளைவிக்கக்கூடியவை. நாம் அந்த உணவுகளை எல்லாம் ஆரோக்கியமானவை என்று கருதி நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஐசிஎம்ஆர் அறிக்கையில் இடம்பெற்றுள்ள உணவுகளில் ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்களும் அடங்கும். அவை இப்போது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளாகக் கருதப்படுகின்றன. ICMR அறிக்கையின்படி, அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள் பட்டியலில் உள்ள உணவு பொருட்கள் எல்லாம் அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை உள்ளன.
அதே நேரத்தில் இந்த உணவுகளில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. இந்த உணவுகளில் ரசாயன கூறுகள், செயற்கையாக அதிகம் சேர்க்கப்படுகின்றன. இதனால், உணவு பொருட்கள் கெடாமல் நீண்ட காலத்திற்கு புதியதாக இருக்கும். ஆனால், இத்தகைய உணவுகள் நம் உடலில் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஐசிஎம்ஆர் அறிக்கையில், அல்ட்ரா-ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பட்டியல் உள்ளது. அவை எவை என்றால், வணிக ரொட்டி, செயற்கையாக உட்கொள்ள வாங்கப்படும் காலை உணவு தானியங்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள் மற்றும் பிஸ்கட்கள், சிப்ஸ் ஆகியவை டாப்பில் இருக்கின்றன.
ஜாம்கள், ஜெல்லிகள் மற்றும் சாஸ்கள், வணிக ஐஸ்கிரீம், புரோட்டீன் பவுடர்கள், கடலை வெண்ணெய், ப்ரீசர் உணவுகள், வணிக சீஸ், பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை எல்லாம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பட்டியலில் உள்ளன.
ஐசிஎம்ஆர் படி, தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் பருமன், இதய நோய்கள், வகை -2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். அவற்றில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ரசாயனங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பை சேர்ப்பதால், மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர, இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
ஐசிஎம்ஆர் தனது அறிக்கையில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தவும், இயற்கையான, புதிய மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கவும் பரிந்துரைத்துள்ளது. உணவில் புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்டவை ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்ளை கொண்டு வரும் என தெரிவித்துள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் இந்த உணவுகளை முற்றிலுமாக கைவிட வேண்டிய அவசியமில்லை என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சீரான அளவில் அவற்றை உட்கொள்வது ஆரோக்கியத்தில் எந்த தீவிரமான விளைவையும் ஏற்படுத்தாது.
உதாரணமாக, கோதுமை மாவில் செய்யப்பட்ட ரொட்டியை வீட்டில் உட்கொள்வது நல்லது, ஆனால் சந்தையில் இருந்து வாங்கப்படும் பேக்கேஜ் செய்யப்பட்ட ரொட்டியின் நுகர்வு குறைக்கப்பட வேண்டும். வீட்டில் தூய நெய் மற்றும் எண்ணெயைப் பயன்படுத்துங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.