யாரிடம் நெருங்கவே கூடாது? யாரிடம் விலகியிருந்தால் வெற்றி? சாணக்கியர் சொல்லும் அறிவுரை!
கௌடில்யர் என்று அழைக்கப்படும் சாணக்கியர் பிரபலமான ஆலோசகர். அவர் அறிவுரையை பின்பற்றி நடந்த மன்னர் சந்திரகுப்தன் மாமன்னராக திகழ்ந்தார் என்பது வரலாறு.
சாணக்கியர் மதியூகியான மந்திரியாக செயலாற்றியது சரித்திரம் என்றால், அவருடைய அறிவுரைகளும் கோட்பாடுகளும் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காலம் தாண்டி நிற்கும் சாஸ்திரமாக மாறியிருக்கிறது.
அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றி மட்டுமல்ல, அரசின் பல்வேறு விவகாரங்கள், தொழில் மற்றும் வர்த்தகம், சட்டம், போர் மற்றும் அமைதி, இராஜதந்திரம், திருமணம், விவாகரத்து, இராணுவ தந்திரம் என பல்வேறு விஷயங்களில் தீர்க்கமான அறிவு கொண்ட சாணக்கியரின் அறிவுரைகளில் சில... இவற்றை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்
நமது நலம் விரும்பிகளாக நடித்துக் கொண்டே உண்மையில் முதுகில் குத்துபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் வேலையைத் தடுத்து அல்லது தவறான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் உங்கள் இலக்கிலிருந்து திசைதிருப்புகிறார்கள்
பல சமயங்களில் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை முன்னேற அனுமதிப்பதில்லை என்கிறது. அதில் குறிப்பாக எதிர்மறையான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும், அவர்கள் நமது எண்ணத்தில் விஷத்தை கலந்து எதைப் பார்த்தாலும் சந்தேகிக்கும் புத்தியை விதைத்துவிடுவார்கள்
முட்டாள்களின் சகவாசம் எப்போதும் தீங்கு விளைவிக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அழித்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்களுடன் வாழ்பவர்களையும் நாடமடையச் செய்கின்றனர். ஒரு முட்டாள் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்வதில்லை
அவநம்பிக்கையான, சோம்பேறித்தனமான மற்றும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் நட்பு உங்களை வாழ்க்கையில் ஏமாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். தனது கவலைகளைப் பற்றி எப்போதும் புலம்பிக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து விலகுங்கள்
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சிப்பதில்லை, சவால்களை எதிர்கொள்ள தயாராக இல்லாத அவர்கள், தங்கள் முன்னேற்றத்தை தாங்களே நிறுத்துகிறார்கள்.