இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்பொழுது? முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த முறை பொங்கலுக்கான பரிசை வழக்கம் போல் ரூ.1000 ரொக்கப் பணம், அதுமட்டுமில்லாமல் அரிசி, கரும்பு சர்க்கரை ஆகியவையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் தொகுப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ரொக்கப் பணம் 1000 ரூபாய் குறித்து எந்தவித தகவலும் இல்லை.
அதுமட்டுமின்றி வேட்டி சேலை என ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஒரு வேட்டி, ஒரு சேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒரு வேட்டி, ஒரு சேலை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு பரிசால் மொத்தமாக 2 கோடியே 20 லட்சத்தி 94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன் பெறுவார்கள்.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு தமிழக அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உளது.
தமிழக அரசு அறிவித்துல 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு யாருக்கு கிடைக்காது எனப்பார்த்தால், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்களுக்கு கிடைக்காது.
இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 வழங்கிட, அதற்கான டோக்கன்கள் வழங்கப்படும் பணி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்றும், பொங்கல் பொருட்களை வழங்கும் பணி 10 ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைப்பார். அதை தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கும் பணியை மற்ற அமைச்சர்கள் அவரவர் மாவட்டங்களிலே தொடங்கி வைப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது