கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரை இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது அணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங்கில் அதற்கான பதிலை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை மும்பை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடிய அவர், 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இப்போது நன்றாக நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை நான் நிச்சயம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். என்னைப் பொறுத்தவரையில் ஐபிஎல் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிறது. அதனை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய தலையாய இலக்கு.
அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதனையும் கட்டாயம் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் இப்போதைக்கு ஓய்வு பெறுவது குறித்து சிந்திக்கவே இல்லை. என்னுடைய கிரிக்கெட்டை இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்த ரோகித் சர்மா அதில் சஸ்பென்ஸை தொடர செய்துள்ளார். அதனால் மும்பை அணியுடன் இருப்பாரா? அல்லது விலகுவாரா? என்ற கேள்விக்கான சஸ்பென்ஸ் தொடர்கிறது.