ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விருப்பம்..! எப்போது தெரியுமா?
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இதில் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "2036இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இது 140 கோடி இந்தியர்களின் நீண்ட நாள் கனவு.. உங்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் இந்த கனவை நாங்கள் நனவாக்க விரும்புகிறோம்... சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆதரவை இந்தியா பெறும் என்று நான் நம்புகிறேன்.
விளையாட்டைப் பொறுத்தவரை அதில் தோல்வி அடைவோர் இல்லை.. விளையாட்டில் வெற்றியாளர்களும் போட்டியில் இருந்து பாடம் கற்போர் மட்டுமே உள்ளனர்.
விளையாட்டு மனிதக் குலத்தை மேம்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு சாதனை முறியடிக்கப்படும் போதும் அனைவரும் பாராட்டுகிறோம். விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமில்லை. அது இதயங்களை வெல்வதும்தான்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக 2028-ல் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியைச் சேர்ப்பது குறித்து கிட்டதட்ட இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவுகள் திங்கள்கிழமை எடுக்கப்படும். அந்த தொடரில் போட்டிகள் டி20 முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்தியா இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதே இல்லை. கடந்த 2010ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை மட்டுமே நடத்தி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரைக் கடந்த முறை அது ஜப்பானில் நடைபெற்றது.
2024 ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கும் நிலையில், 2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலும், 2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதனைப் பிரதமர் மோடியும் இப்போது உறுதி செய்துள்ளார். ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் வாக்கு அளித்து அதன் அடிப்படையிலேயே ஒலிம்பிக் எங்கு நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.