ஷாருக்கான் போல் உயரங்களை அடைய... அவரே பரிந்துரைக்கும் 5 அருமையான புத்தகங்கள்!
1992ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கான் தற்போது உலகம் முழுவதும் இந்தியாவுக்கான முகமாக அறியப்படுகிறார். அவர் சினிமா நடிகர் என்பதை தாண்டி பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார்.
ஷாருக்கானுக்கு புத்தகம் வாசிப்பதும் மிகவும் பிடித்தமானதாகும். அந்த வகையில், தன்னை போலவே பெரும் உயரங்களை எட்ட வேண்டும் என கனவுடன் வாழும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய 5 புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார்.
The Power of Now: ஜெர்மனிய எழுத்தாளரான எக்கார்ட் டோல்லே (Eckhart Tolle) எழுதிய இந்த புத்தகம் ஆன்மீக ரீதியிலான ஒன்று. இதில் நிகழ்காலத்தில் நாம் வாழ வேண்டியதன் அவசியம் குறித்தும், மன அமைதி குறித்த தேடல் குறித்தும் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கும். உங்களின் சுயத்தை வளர்க்க இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
To Kill a Mockingbird: அமெரிக்க எழுத்தாளர் ஹார்பர் லீயின் புகழ்பெற்ற மற்றும் முதல் நாவல் இதுவாகும். தெற்கு அமெரிக்காவில் வசிக்கும் இளம் ஸ்கவுட் ஃபின்ச் எதிர்கொள்ளும் இன ரீதியிலான அநீதிகளையும், அதன் பிரச்னைகளையும் இந்த நாவல் பேசுகிறது. மேலும், அவரின் தார்மீக ரீதியிலான வளர்ச்சியையும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிச்சயம் இளைஞர்கள் வாசிக்க வேண்டும்.
Steve Jobs: முக்கியமான ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறை எழுதுவதில் பெயர் பெற்றவர் அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் (Walter Isaacson). ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்கிளின், எலான் மஸ்க் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறுகளை இவர் எழுதியுள்ளார். அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தகம்தான் இது. இதில் அவர் வாழ்க்கை குறித்தும், வேலை குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவர் சந்தித்த சவால்களை அறிந்துகொள்வது உங்களுக்கும் பெரிய பாடமாக இருக்கும்.
The Alchemist: தமிழில் இந்த நாவல் ரசவாதி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த பாலோ கோயல்ஹோ (Paulo Coelho) என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்த புத்தகம் என்பது ஒருவரின் சுய அறிதல், கனவு உள்ளிட்ட உள்ளார்ந்த விஷயங்கள் குறித்து தத்துவார்த்த ரீதியில் பேசுகிறது. இதன் தத்துவத்திற்காகவே இந்த நாவல் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
The Fountainhead: ரஷ்ய அமெரிக்க எழுத்தாளரும், தத்துவாசிரியரான அய்ன் ராண்ட் (Ayn Rand) எழுதிய இந்த நாவல், ஹாவர்ட் ரோர்க் என்ற கட்டடக் கலைஞரின் வாழ்க்கை கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. இதில் ஹாவர்ட் சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்கங்களை முற்றிலுமாக நிராகரிக்கிறார். மேலும், தனது நம்பிக்கைகளை ஆழமாக பின்பற்றுகிறார். படைப்பு சுதந்திரம் மற்றும் தார்மீக ரீதியிலான ஒழுக்கம் குறித்து இந்த விளக்கும் இந்த நாவல் உலகம் முழுவதும் பலபேரால் பேசப்படும் ஒன்றாக மாறியது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஷாருக்கான் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்ததாகும். இங்கு அவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.