100 வயதை கடந்து வாழ ஜப்பானியர்கள் செய்யும் 6 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?
ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை:
ஜப்பானியர்கள் பொதுவாகவே அதிக ஆயுளுடன் வாழ்வர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதன் என்ன சாப்பிடுகிறான் என்பதை வைத்து மட்டும் ஆயுள் நீளாது. இதற்கு, அந்த மனிதர் மகிழ்ச்சியாக மன நிலையுடன் இருப்பதும் அவசியமாகும். அது சரி, ஜப்பானியர்கள் இப்படி அதிக ஆயுளுடன் வாழ என்ன காரணம்? இவர்கள், தங்களை தாங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள 6 வழிகளை பின்பற்றுகின்றனர். அவை என்னென்ன தெரியுமா?
ஷிகாட்டா கா நய்:
இதற்கு அர்த்தம் “நம்மால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்பதுதான். நம்மில் பலர், நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை நினைத்து வருந்துவோம். அதை தவிர்க்க, அந்த எண்ண ஓட்டத்தின் மாறுதலாக இருக்கிறது இந்த வாழ்க்கை தத்துவம். நம்மால் முடிந்ததை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் கரு. இப்படி நாம் நமது எண்ணத்தை மாற்றுவதால் அதிகம் யோசிக்காமல் இருப்போம், மன அழுத்தமும் குறையும்.
காமன்:
இதற்கு அர்த்தம் “பொறுமை, விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மை” என்பதாகும். அனைத்து சூழ்நிலைகளையும் கண்ணியத்துடன் கையாள வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இது, நமது தினசரி டயட் விஷயத்திலும் இருக்கலாம், அல்லது வாழ்க்கையில் நாம் ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவாக கூட இருக்கலாம். எதுவாக இருப்பினும், அதில் கண்ணியம், பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.
கிண்ட்சுகி:
ஜப்பானியர்கள், உடைந்த பொருட்களை வைத்து அதை ஒரு அழகு வடிவம் கொண்ட வேறு ஒரு பொருளாக மாற்றுவர். இப்படி, உடைந்து போன அல்லது ஒழுங்கில்லாத விஷயங்களிலும் அழகை கண்டுபிட்பதே, Kintsugi ஆகும். நம்மிடம் இருக்கும் நிறைகள் எந்த அளவிற்கு நமக்கு பிடிக்கிறதோ அதே போல நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இது சொல்ல வரும் நோக்கமாகும்.
கைஸன்:
இதற்கு, "தொடர்ச்சியான முன்னேற்றம்" என்பது பொருளாகும். நாம் எடுக்கும் முயற்சிகளில் சிறிய முன்னேற்றம் இருந்தால் கூட, அது நம் வாழ்வில் பின்னாளில் பெரிய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையலாம் என்பதை இது காட்டுகிறது.
இக்கிகை:
இதற்கு பொருள், “நம் வாழ்வின் அர்த்தம்” என்பதாகும். நாம் எதற்காக வாழ்கிறோம், நம் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த தத்துவம் விளக்குகிறது.
Oubaitori:
இதற்கு அர்த்தம் “தனித்துவமான பயணம்” என்பதாகும். வாழ்வில் அனைவருக்கும் வெற்றிக்கான அளவுகோள்கள் இருக்கும். ஆனால், இவை அனைத்தும் அனைவருக்கும் ஒரு சேர இருக்காது. எனவே, நாம் பிறரது வெற்றியை பார்த்து நம்மை குறைவாக எடை போட்டு விடக்கூடாது என்பதுதான் இது கூற வரும் தத்துவமாகும்.
ஜப்பானியர்களின் இந்த பழக்கங்களை பின்பற்றி, நீங்களும் ஆரோக்கியமான மனநலனுடனும் உடல் நலத்துடன் வாழுங்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)