கலைஞர் உரிமைத் தொகை குட்நியூஸ் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படுகிறது.
பெண்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக இந்த ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தின் பயானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மக்களின் நீண்ட நாட்களின் கோரிக்கையாக உள்ளது. அதாவது கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. ஏனென்றால், அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் பலரும் கலைஞர் உரிமைத் தொகை பெறாமல் உள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரிடமும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எப்போது எங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவீர்கள் என பெண்கள் கேட்டு வந்தனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படுமா? எப்போது செய்யப்படும் என்று கேள்விகளை முன்வைத்தார்.
அதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்னை உட்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பி வருவதாக கூறினார். இது குறித்து அரசு ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளதாக கூறினார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.