மெரினா கடற்கரையில் இறுதிப்போட்டி கேப்டன்கள்... கோப்பை யாருக்கு?
17ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமான தொடக்க விழாவுடன் தொடங்கியது.
10 அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடின. மொத்தம் 70 சுற்றுகள் போட்டிகள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
குஜராத் அகமதாபாத் நகரில் நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
தொடர்ந்து குஜராத் அகமதாபாத் நகரில் நடந்த எலிமினேட்டரில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
17ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணி முதல் நடைபெற உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்டை நடத்த உள்ளன.
இறுதிப்போட்டியை முன்னிட்டு கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் இன்று சென்னை மெரினாவில் ஐபிஎல் கோப்பையுடன் போட்டோசூட் எடுத்துள்ளனர்.
ஐபிஎல் கோப்பையுடன் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் சிறிய படகில் இந்த போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் அண்ணா பெவிலியன் நுழைவுவாயில் அருகே ஆட்டோவுடன் இரு கேப்டன்கள் இருக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.