உடலுறவுக்கு எப்போதெல்லாம் நோ சொல்ல வேண்டும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு பார்ட்னருடன் மட்டும் உறவில் இருப்பது எப்போதும் நல்லது. இதை நான் ஒழுக்கம் சார்ந்த விஷயமாகச் சொல்லவில்லை. ஏனென்றால், மனம் ஒத்துப் போகாமல் பிரிந்து, அதன் பின்னர் மற்றொரு துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்களின் நிலைமை என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். முதல் மணமோ, மறுமணமோ, நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு பார்ட்னருடன் வாழ்வது உறவுச் சிக்கல்களிலிருந்தும், பால்வினை நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். இதை என்னுடைய மருத்துவ அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் சிறுமியரை குரூமிங் செய்து அவர்கள் சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். இரண்டுமே குற்றம்தான். சம்பந்தப்பட்ட பெண்ணே உறவுகொள்ள விருப்பம் தெரிவித்தாலும், அவர் மைனராக இருந்தால் நோ செக்ஸ். மீறி உறவுகொள்வது சட்டப்படி குற்றம். தண்டனையும் கிடைக்கும்.
ஒரு திருமண பந்தத்திலிருந்து வெளியே வந்த பிறகு, விருப்பப்படி இன்னொரு துணையுடன் வாழலாம். ஆனால், ஒரு திருமண உறவுக்குள் இருக்கும்போதே `இன்னோர் உறவில்' இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதை நோக்கி யாராவது உங்களைத் தூண்டினாலும் அதற்கு அழுத்தமாக நோ சொல்லுங்கள். உங்களுடைய தயக்கம் எதிராளிக்கு சம்மதம் தெரிவித்தது போலாகிவிடும். ஆண், பெண் இருவருமே திருமணமாகும்போதே `எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையரை தவிர்ப்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.
மனைவியே என்றாலும் அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோதும், விருப்பமில்லாதபோதும் உறவுக்கு வற்புறுத்துதல் மனிதப் பண்பல்ல. மாதவிலக்கின்போதும் உறவுகொள்ளலாம்; கருவுற்றிருக்கும்போதும் உறவுகொள்ளலாம் என்று நான் பலமுறை சொல்லியிருந்தாலும், இதில் மனைவிக்கும் விருப்பமிருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும்.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை, செக்ஸுக்கு வற்புறுத்துவது அல்லது மிரட்டி உறவுகொள்ள வைப்பது அல்லது `அதுக்கு பதிலா இது' என்று பண்டமாற்றுக்கு முயல்வதும் கூடவே கூடாது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவக்கூடிய கொரோனா, காசநோய் போன்ற தொற்றுநோய்கள் இருக்கையில் செக்ஸை தவிர்ப்பது இருவருக்குமே பாதுகாப்பு.
பால்வினை நோய்கள் இருந்தால், வாழ்க்கைத்துணையே என்றாலும், அவர்கள் குணமான பிறகுதான் தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும். தனக்கு பால்வினை நோய் இருப்பது தெரிந்த பிறகு வாழ்க்கைத்துணையுடன் மட்டுமல்லாமல், மற்றவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். மற்ற விஷயங்களைப் போலவே பாலியலும் உலகமயமாகிவிட்டது. அதனால், வெளிநாடுகளைப் போல இங்கும் `குரூப் செக்ஸ்', `ஓர் இரவுக்கு மட்டும்' என்று மக்களின் மனப்பான்மை மாறிவருகிறது. இவையும் தவிர்க்கப்பட வேண்டியவை.