திருப்பதி கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு நிவாரணம்! ஆந்திர அரசு அறிவிப்பு..
இந்தியாவின் சிறப்புமிக பெருமாள் கோவில்களுள் ஒன்று, திருப்பதி. இங்கிருக்கும் வெங்கடாசலபதியை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். அதிலும், வைகுண்ட ஏகாதசி பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள கூட்டம் அலை மோதும்.
வரும் ஜனவரி 10 முதல் 12ஆம் தேதி வரை, சொர்க்கவாசல் திறக்கப்படும். இதற்கு திருப்பதியில் மொத்தம் 94 இடங்களில் பொது தரிசன டோக்கன் வழங்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை டோக்கன் வினியோகம் தொடங்கிய நிலையில், இதற்கு ஒரு நாள் முன்னரே பல லட்சம் பேர், லைனில் நிற்க தொடங்கினர்.
ஜனவரி 8ஆம் தேதியான நேற்று, இரவு மாலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. இந்த நிலையில், நேற்றிரவு கூட்ட நெரிசல் அதிகமானதில், அதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 40 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 6 பேரில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகாவும் (55) ஒருவர். பிறர், விசாகப்பட்டினம் உள்பட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இப்படி, திருப்பதி கோயிலுக்கு செல்ல டோக்கன் வாங்க சென்று 6 பேர் உயிரிழந்திருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஆந்திர அரசாங்கம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்திருக்கிறது.
ஆந்திர அரசாங்கத்தின் நிவாரணத்தொகை மட்டுமில்லாமல், தமிழக அரசும் தமிழ்நாட்டில் இருந்து சென்று திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்த மல்லிகாவிற்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.