இது புதுசு இல்லை... உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் `அதிர்ச்சி தோல்விகள்` இதோ!
கிரிக்கெட்டின் பிறப்பிடமாக பார்க்கப்படும் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல 44 ஆண்டுகளானது. கடந்த 2019 தொடரில் தான் இங்கிலாந்து அணி இயான் மோர்கன் தலைமையில் சாம்பியன் ஆனது.
இருப்பினும், இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையில் பல அதிர்ச்சி தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அதிர்ச்சி தோல்விகளை இங்கு காணலாம்.
ENG vs ZIM: 1992 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கிரஹாம் கூச் அந்த தொடரில் இங்கிலாந்து வழிநடத்தினார். இருப்பினும் இங்கிலாந்து அந்த தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ENG vs IRE: 2011 உலகக் கோப்பை இங்கிலாந்து மிக மிக கசப்பான ஒன்றாகும். 2010இல் டி20 உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து புத்துணர்ச்சியுடன் இந்த தொடரை சந்தித்தது. இதில் முதலில் அயர்லாந்திடம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. அயர்லாந்து அணி 328 என்ற இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
ENG vs BAN: 2011 உலகக் கோப்பையின் மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. அதில், வங்கதேசம் 226 ரன்கள் என்ற இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இருப்பினும் இந்தியா உடனான போட்டி டிராவான நிலையில் கூடுதலான ஒரு புள்ளியால் அந்த அணி காலிறுதிக்கு சென்றது. இருப்பினும் இலங்கையிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
ENG vs BAN: 2015 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் வங்கதேசத்திடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இந்த முறை 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. மேலும், இதனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் குரூப் சுற்றோடு வெளியேறியது.
ENG vs AFG: 2019இல் சொந்த மண்ணில் கோப்பையை வென்று தற்போது நடப்பு சாம்பியனாக உள்ள இங்கிலாந்து அணி, இன்றைய போட்டியில் ஆப்கனிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைடந்தது. மேலும், இதுதான் அந்த அணியின் அதிக ரன்கள் வித்தியாசத்திலான அதிர்ச்சி தோல்வியாகும்.