காய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அம்மை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!!
உலகம் முழுதும் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பீதியை கிளப்பி வருகிறது. ஆப்பிரிக்காவின் காங்கோவில் தொடங்கிய குரங்கு அம்மை தற்போது பாகிஸ்தான், ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளதாக தகவல்கல் கிடைத்துள்ளன இதன் காரணமாக உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குரங்கு அம்மை பரவலை உலக சுகாதார அமைப்பான WHO கடந்த 14ம் தேதி பொது சுகாதார அவசரநிலையாக (Global Emergency) அறிவித்தது. குரங்கு அம்மை தட்டம்மை குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள பாகிஸ்தானில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டது பற்றி தெரிய வந்த பின்னர் இந்தியாவில் அச்சம் அதிகமாகியுள்ளது. பாகிஸ்தானில் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தயார்நிலை மற்றும் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று மூத்த அதிகாரிகளை கலந்தாலோசித்தார். உலக சுகாதார அமைப்பு 2022 ஆம் ஆண்டில் குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக முதன்முதலில் அறிவித்தது. இந்தியாவில் இதுவரை 30 பேர் மட்டுமே குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் தற்போது குரங்கு அம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை கிளேட் I (Clade I) மற்றும் கிளேட் II (Clade II) என இரண்டு வகைப்படும். இந்த இரண்டு வகைகளில் கிளேட் I மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இது பல தசாப்தங்களாக மத்திய ஆபிரிக்காவின் காங்கோ படுகையில் தன் கோர முகத்தை காட்டி வருகின்றது. கிளேட் II வகையில் தீவிரம் சற்று குறைவாக இருக்கும். மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது உள்ளது.
2022 மே மாதம் கிளேட் II -வின் குறைந்த தீவிரம் கொண்ட மாறுபாடான கிளேட் IIb உலகம் முழுவதும் பரவியது. இது முதன்மையாக ஓரினச்சேர்க்கை மற்றும் இருபாலின ஆண்களை பாதிக்கிறது. இப்போது கிளேட் I இன் புதிய பிறழ்ந்த மாறுபாடு, கிளேட் Ib -ஐ உருவாகியுள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது.
குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடித் தொடர்பு மூலம் பரவுகிறது. வாய் மற்றும் பிற உறுப்புகளில் இருந்து சுரக்கும் சுரப்புகளாலும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. நோயாளிகள் பயன்படுத்திய உடைகள், பிற பொருட்கள், பச்சை குத்திக்கொள்வது ஆகியவற்றன் மூலமும் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நோய் தாக்கிய விலங்குகளை தொடுவதாலும், விலங்குகள் கடிப்பதாலும் இந்த வைரஸ் மனிதர்களுக்குள் நுழையும் என்று கூறப்படுகிறது.
இந்த வைரஸ் மனித உடலில் நுழைந்த 1 முதல் 21 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தோன்றக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வறண்ட தொண்டை, தலைவலி, கொப்புளங்கள், காய்ச்சல், தசைகளில் வலி, முதுகுவலி, சோம்பல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. இவை சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இது பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது. சிலருக்கு வாய், கண், தொண்டை மற்றும் அந்தரங்க பாகங்களில் கொப்புளங்கள் வரலாம்.
குரங்கு அம்மை போன்ற அரிப்பு அல்லது சொறி உள்ளவர்களை அணுகுவதைத் தவிர்க்கவும். பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது நபருடன் தொடர்பு கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நோயாளி பயன்படுத்திய ஆடைகள், போர்வைகள் அல்லது பிற பொருட்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். மேலும் கைகளை அடிக்கடி சோப்பு நீர் ஒண்டு சுத்தம் செய்வது நல்லது. சுகாதாரம் மற்றும் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொது இடங்களில், கூடுதல் எச்சரிக்கையும் அவசியம். குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையைப் பின்பற்றி பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைகளில் வலி, உடலில் குளிர்ச்சியான உணர்வு, நிணநீர் கணுக்கள் வீக்கம், தோல் வெடிப்பு, கொப்பளங்காள் போன்றவை குரங்கு அம்மை காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இவற்றில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இதில் அரிப்பு, சொறி ஆகியவவை பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.
குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது. கைகளை கழுவ முடியாவிட்டால், சேனிடைசர்களையாவது பயன்படுத்த வேண்டும். இந்த நோயின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்க அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.