2011 உலகக் கோப்பையுடன் தோனி... பிசிசிஐக்கு ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை - என்ன தெரியுமா?
17வது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மோதுகின்றனர். இந்த போட்டி மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய பிறகு, அங்கிருந்து மும்பை புறப்பட்டது. மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்திற்காக மும்பை வான்கடேவில் சிஎஸ்கே பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் நட்சத்திர வீரருமான தோனி மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் 2011 உலகக் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி நிர்வாகமும், பிசிசிஐயும் அதன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பிசிசிஐ அதன் X பக்கத்தில், மூன்று புகைப்படங்களை பதிவிட்டு அதில்,"எம்எஸ் தோனி - உலகக் கோப்பை... Made for each other" என பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தோனி அந்த கோப்பைகளை முழுமையாக கையில் ஏந்தாமல், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கோப்பையை தொட்டு பார்த்துக்கொண்டுள்ளார்.
சிஎஸ்கே அணியும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில்,"கோடிக்கணக்கான கனவுகளின் நினைவகம்" என பதிவிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை தோனி தலைமையில்தான் இந்தியா வென்றது.
வான்கடேவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோனி சிறப்பாக விளையாடி சிக்ஸரை அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்த காட்சி இன்றும் பலரின் நினைவுகளில் அழியாமல் இருக்கிறது. அதுதான் கடைசியாக இந்திய அணி வென்ற உலகக் கோப்பையாகும்.
தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையும், 2011ஆம் ஆண்டு ஓடிஐ உலகக் கோப்பையும், 2013ஆம் ஆண்டு சாம்பயின்ஸ் டிராபியும் என இந்தியா மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றது. 2013ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா ஐசிசி கோப்பையை வெல்லவே இல்லை. மேலும், தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் சூழலில், தோனி வென்ற மூன்று ஐசிசி கோப்பைகளையும் ஒன்றாக வைத்து அவரை புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என பிசிசிஐக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.