காதலிக்க கற்றுக்கொடுக்கும் புத்தகங்கள்..கண்டிப்பாக படிக்க வேண்டிய காதல் நாவல்கள்!
காதல் நாவல் படிக்க பிடிக்குமா? அப்போ சரியான இடத்துக்குதான் வந்துள்ளீர்கள். டிஜிட்டல் உலகில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றங்களால் புத்தகம் படிக்கும் பழக்கம் பலருக்கு குறைந்து விட்டதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் பலருக்கு நாவல்கள் மீது இருக்கும் காதலும் ஆர்வமும் இன்னும் குறையவில்லை. அதிலும், தமிழ்நாட்டில் பலர் ஆங்கில நாவல்களையும் விரும்பி பிடிக்கின்றனர். ஒரு சிலருக்கு Non-Fiction எனப்படும் கதையற்ற புத்தகங்கள் படிக்க பிடிக்கும். ஒரு சிலருக்கு, மாயாஜாலம், காதல், அறிவியல், கொலை, வேற்றுலகம் என பல விஷயங்கள் கலந்த Fictional கதைகளை படிக்க பிடிக்கும். அப்படி, பலருக்கு காதலிக்க கற்றுக்கொடுக்கும் ஆங்கில நாவல்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
படிப்பவர்களின் மனங்களை கடைசியில் கசக்கி பிழிந்து எறிந்துவிடும் கதையை கொண்டது, தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் (The Fault In Our Stars). இந்த நாவலை, பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதியிருக்கிறார். இப்புத்தகம் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் காதலில் விழுவதுதான் இந்த புத்தகத்தின் கதை.
ஸ்டெஃபனி மேயர் என்பவர் எழுதிய புத்தகம், Twilght. ஆங்கிலத்தில் Vampire என்ற கற்பனை கதாப்பாத்திரங்கள் மிகவும் பிரபலம். இவை, ரத்தத்தை குடிக்கும் மனிதன் போன்ற உயிரினங்கள் என பலர் கூறுவர். இந்த கதையில், ஒரு மனித பெண்ணிற்கும் ஒரு வேம்பையருக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும் என்பதை வைத்து கதை எழுதியிருப்பர். காதல் நாவலான இது, டீன் ஏஜ் பெண்களிடையே மிகவும் பிரபலம்.
புற்றுநோயால் உயிரிழக்கும் கணவன், தனது காதல் மனைவிக்காக 12 மாதங்களுக்கு 12 கடிதங்களை எழுதி வைக்கிறான். அவன் இறந்த பின்பு ஒவ்வொரு மாதமாக அந்த மனைவி ஒவ்வொரு கடிதத்தை எடுத்து படித்து பார்க்கிறாள். அதில், தனது இறந்து போன கனவனை தேட நினைத்து தன்னையே தேடிக்கொள்கிறாள். இதுவே, பிஎஸ் ஐ லவ் யூ (PS: I Love You) நாவலின் கதை. இதனை சிசிலியா அஹர்ன் என்பவர் எழுதியிருக்கிறார்.
கூலன் ஹூவர் எழுதிய நாவல்களுள் ஒன்று இட் எண்ட்ஸ் வித் அஸ் (It Ends With Us). பல பெண்கள், தனது கணவன் அடித்தாலும் உதைத்தாலும அவன் மீதுள்ள காதலாலோ, அல்லது சமூகத்தின் மீதுள்ள பயம் காரணமாகவோ அந்த உறவில் இருந்து விலகாமல் அப்படியே இருந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதைதான், இட் எண்ட்ஸ் வித அஸ். இந்த கதை மீது பலருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இயல்பு வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதைத்தான் இதிலும் எழுதியிருக்கின்றனர் என வாசகர்கள் பலர் கூறுகின்றனர்.
நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய நாவல், தி நோட்புக் (The Notebook). உலகளவில் பல மில்லிய கணக்கில் விற்றுப்போன கதை புத்தகங்களுள் இதுவும் ஒன்று. இப்புத்தகம், 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகப்போர் சமயத்தில் காதலில் விழும் இருவர், தங்களது சூழ்நிலை காரணமாக பிரிந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்கள் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. அப்போது என்ன நடந்தது என்பதை வைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது.
ஜேன் ஆஸ்டின் என்பவர் எழுதிய புத்தகம், ப்ரைட் அண்ட் ப்ரீஜுடீஸ். இந்த புத்தகம், 1813ஆம் ஆண்டு எழுதப்பட்டது. சமூகத்தின் பார்வையில் ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும் இருவர் காதலில் விழுந்தால் எப்படியிருக்கும் என்பதை வைத்து எழுதப்பட்ட நாவல் இது. இந்த நாவல், க்ளாசிக் புத்தகங்களின் லிஸ்டில் முதலிடம் பெற்றிருக்கிறது.