இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!!
ரயில்வே பயணிகளுக்கு, இந்த சேவையை வழங்குவதன் மூலம், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் ரயில்வே இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இப்போது தற்போது வடக்கு ரயில்வே இந்த வசதியைத் தொடங்கியுள்ளது. இதற்காக ஒரு நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் செய்துள்ளது.
BoW செயலியின் மூலம் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்), ரயில் பயணிகள் தங்கள் பொருட்களை தங்கள் வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு அல்லது ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு கொண்டு வரும் வசதியை பெற விண்ணப்பிக்கலாம். பயணிகளின் சாமான்களை, பத்திரமாக, பாதுகாப்பாக, பயணிகளின் முன்பதிவு விவரங்களின்படி, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறூவனம் கொண்டு செல்லும்.
ரயில்வே குறைந்த கட்டணத்தில் வழங்கும் இந்த சேவையின் மூலம், லக்கேஜ்களை சுமந்து செல்லாமல், வசதியாக பயணிக்கலாம். அதிக லக்கேஜ்கள் இருக்கும் சமயத்தில் இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த வசதி ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு மற்றும் தனியாக பயணம் செய்யும் பெண்கள் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ரயில் புறப்படுவதற்கு முன்பு பேக்கேஜ் டெலிவரி செய்யப்படும்.
தொடக்கத்தில், புது தில்லி, தில்லி ஜங்க்ஷன், ஹஸ்ரத் நிஜாமுதீன், தில்லி கன்டோன்மென்ட், தில்லி சராய் ரோஹில்லா, காஜியாபாத் மற்றும் குர்கான் ரயில் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளுக்கு இந்த சேவை கிடைக்கும். பின்னர் படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் தொடங்கப்படும். இந்த சேவை பயணிகளுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு வருவாயும் கிடைக்கும். இந்திய ரயில்வேயின் பயணிகள் இதுவரை பேலஸ் ஆன் வீல்ஸ் அனுபவித்துள்ளனர், இப்போது அவர்களும் பேக்ஸ் ஆன் வீல்ஸ் சேவையையும் அனுபவிக்கலாம்.