இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில்: வேலாயுதமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் தரிசனம்

Tue, 04 May 2021-8:51 am,

இக்கோயில் முதலில் கி.பி 948 இல் கட்டப்பட்டது. இருப்பினும், இது 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண மன்னர் கலிங்க மஹாவின் அமைச்சர் புவனேகா வாஹுவால் மீண்டும் கட்டப்பட்ட பின்னர் இன்னும் பிரபலமானது. நல்லூர் யாழ்ப்பாண (Jaffna) மன்னர்களின் தலைநகராக இருந்துள்ளது. இது ஒரு தற்காப்பு கோட்டையாகவும் புகழ் மிக்க நகரமாகவும் இருந்தது. நீதிமன்ற கட்டிடங்கள், அரண்மனைகள், வணிகங்க அங்காடிகள் என பலவித கட்டிடங்கள் அந்த காலத்திலேயே நல்லூரில் இருந்தன.

இந்தியாவின் பண்டைய கோயில் நகரங்களான மதுரை மற்றும் பாடலிபுத்ர கட்டிட வகையின் அடிப்படையில் இக்கொயிலும் கட்டப்பட்டுள்ளது. நல்லூர் நகரம் இந்த கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது. நகரத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொரு நுழைவாயிலிலும் கோயில்கள் இருந்தன.

வழக்கமாக தென்னிந்திய கோயில்களில் பின்பற்றப்படும் பூஜை முறைகள்தான் இங்கும் பின்பற்றப்படுகின்றன. பூக்கள், பழங்கள், கற்பூரம் ஆகியவற்றை நீங்கள் சன்னதிகளுக்கு எடுத்துச் செல்லலாம். கோயிலுக்கு எதிரே உள்ள கடைகளிலிருந்து இவற்றை வாங்கலாம். கற்பூரம் மற்றும் தூபம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சன்னதியில் கொடுக்கும் முன்னர் வெளியே கழுவி சுத்தம் செய்யும் பழக்கம் இங்கே உள்ளது. கோயிலுக்குள் ஆண்கள் இடுப்பு மட்டத்திற்கு மேல் வேறு எந்த ஆடைகளையும் அணிய அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் முறையான மற்றும் முழங்கால் நீளத்திற்குக் கீழே வரும் ஆடைகளைதான் அணிய வேண்டும். கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க மொபைல் போன்களை இங்கே ஆஃப் செய்து வைக்க கோரப்படுகிறது. பூஜைகளுக்கான டிக்கெட்டுகள் வெறும் ரூ .1.00 க்கு விற்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக இந்த விலைதான் உள்ளது. பண்டைய மந்திரங்களுடன் வண்ணமயமான பூஜைகளை அவதானிக்க நீங்கள் சில டிக்கெட்டுகளை வாங்கி சன்னதிகளில் உள்ள பூசாரிகளுக்கு வழங்கலாம். கோயிலுக்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் பக்தர்கள் பொதுவாக பிரதான நுழைவாயிலைத் தான் பயன்படுத்துவார்கள்.

பிரதான சன்னதியில் கர்ப்பகிரகத்தில் வேலாயுதம் உள்ளது. இங்கு முருகர் வேலாகத்தான் கர்ப்பகிரகத்தில் காட்சியளிக்கிறார். நீங்கள் இங்கே வழிபாடு செய்து பூஜை செய்யலாம். பிரசாதமாக விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் இங்கே வழங்கப்படுகின்றது. இந்த கோவிலில் பல இனங்களையும் மதங்களையும் வணங்குபவர்கள் அடிக்கடி வருகிறார்கள். கோயில் வளாகத்தில், விநாயகர், வள்ளி, தெய்வானை மற்றும் சிவபெருமான் என இன்னும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன. கோயிலுக்கு வெளியே வந்தால் அழகிய கோயில் ரதத்தை நீங்கள் காணலாம். பண்டிகைக் காலங்களில் இந்த தேர் வீதி உலா வருகிறது.

ஆகஸ்டு மாத இறுதியில் நீங்கள் அங்கு சென்றால், இக்கோயிலின் புகழ்பெற்ற 25 நாள் திருவிழாவைக் காணும் அதிர்ஷ்டசாலியாவீர்கள். இந்த புகழ்பெற்ற மற்றும் வண்ணமயமான திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். திருவிழாவின் போது தவறவிடக்கூடாத சிறப்பு நிகழ்வுகளில் மஞ்சம், கைலாசவாஹனம், வெள்ளிவிமானம், தண்டாயுதபாணி உற்சவம், சப்பரம், தேர் திருவிழா, தீர்த்தம் எனப்படும் நீர் வெட்டும் திருவிழா மற்றும் திருகல்யாணம் ஆகியவை அடங்கும். இந்த திருவிழாவின் போது முழு நகரமும் உற்சாகத்துடன் பண்டிகை கோலம் பூண்டுகொள்கிறது. இங்கு கொண்டாடப்படும் மற்றொரு பிரபலமான நிகழ்வு திருக்கார்த்திகை ஆகும். இது நவம்பர் நடுப்பகுதியில் நிகழ்கிறது. இந்த திருவிழாவிலும் பலர் கலந்துகொண்டு முருகனருள் பெறுகிறார்கள். இது தவிர, கந்தர் சஷ்டி, தை கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகியவையும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link