வேற லெவல் Wedding: நீருக்கடியில் திருமணம் புரிந்த தம்பதி நீடூழி வாழ்க!!
)
சென்னையில் ஒரு டெக்கி தம்பதியினர் தாங்கள் செய்துகொண்ட வித்தியாசமான திருமணத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்கள் நம் நாட்டு பாணியிலேயே நீருக்கடியிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை நிரூபித்துள்ளனர். 60 அடி ஆழத்தில், பட்டு வேட்டி சட்டையுடன் மணமகனும், பட்டுப் புடவையுடன் மணமகளும் திருமணம் செய்துகொண்டனர். நீருக்கடியில் இருந்தாலும், இந்த திருமணத்தில் அலங்காரங்கள், கேமராக்கள் என எதற்கும் பஞ்சமில்லை.
)
திருவண்ணாமலையைச் சேர்ந்த மணமகன் சின்னதுரை, மணமகள் ஸ்வேதாவுடனான தனது திருமணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்கிறார். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையும்தான் நீருக்கடியில் திருமணம் செய்து கொள்வதற்கான முடிவின் காரணங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"நான் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக உரிமம் பெற்ற ஸ்கூபா டைவராக இருக்கிறேன். ஆனால் என் மனைவி ஸ்வேதாவுக்கு நீந்த மட்டுமே தெரியும். அவர் இதற்கு முன்பு டைவிங் செய்ததில்லை. என் பெற்றோர் இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் ஸ்வேதாவையும் அவரது பெற்றோரையும் ஒப்புக் கொள்ளவைக்க சிறிது நேரம் ஆனது” என்று துரை ஜீ மீடியாவிடம் கூறினார்.
)
பிப்ரவரி 1, திங்கட்கிழமை, திருமண சடங்குகளின் முதல் பகுதியை குடும்பத்துடன் நிலத்தில் முடித்த பின்னர் தம்பதியினர் ஒரு படகில் சென்றனர். ஆறு டைவிங் பயிற்றுநர்களுடன் சேர்ந்து வங்காள விரிகுடாவில் சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு பயணம் செய்தனர். "புடவை, வேட்டியை வெல்க்ரோவால் கட்டி, நாங்கள் டைவ் செய்தோம். கேமராக்கள் மற்றும் அலங்காரங்களை எங்கள் ஆறு டைவிங் பயிற்றுநர்கள் குழு கையாண்டது" என்று துரை மேலும் கூறுகிறார்.
நீருக்கடியில், அவர்கள் மாலைகளை மாறிக்கொண்டனர். துரை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் பூச்செண்டுடன் போஸ் கொடுத்தனர். ஒரு வித விழிப்புணர்வுக்காக திருமணம் இவ்வகையில் நடந்தாலும், பூ, மாலை, வாழை இலை என திருமணத்தின் சடங்குகள் அனைத்தும் முறையே நடந்தன.
கடல் தரையில் கிடந்த மற்ற குப்பைகளுக்கு இடையில் முகக்கவசங்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களைக் கண்டு அவர்கள் மனம் உடைந்ததாக துரை கூறினார்.
ஏறக்குறைய 40 நிமிடங்கள் நீருக்கடியில் இருந்துவிட்டு, தம்பதியினர் கரைக்குத் திரும்பி, மீதமுள்ள சடங்குகளுக்காக தங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்றனர்.
நீருக்கடியில் திருமணம் புரிந்த இந்த தம்பதி நீடூழி வாழ நாமும் வாழ்த்துவோம்!!