Pongal 2025 Kolam: வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம், இவ்வளவு அழகான காரணம் உள்ளதா?
வீட்டு வாசலில் கோலம் போடுவது நமது பண்பாடு. இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருகிறது. விசேஷ நாட்களில் இந்த கோலங்கள் இன்னும் வண்ணமயமாக, பெரிதாக, வித்தியாசமாக, அழகாக இருக்கும்.
மார்கழி மாதம் கோலங்களுக்கான மாதம். தமிழகத்தில் பல இடங்களில் மார்கழி கோலங்களுக்கான போட்டிகளும் நடப்பதுண்டு.
மார்கழி முடிந்து தை பிறக்கும் நாளான பொங்கல் அன்று அனைவரும் மிகவும் அழகான, பெரிய கோலங்களை போட்டு அவற்றை அழகாக அலங்கரிக்க ஆசைப்படுகிறோம்.
ரங்கோலியில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் வீட்டிற்கு நேர்மறையான் அதிர்வுகளையும் செழிப்பையும் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது வீட்டில் ரங்கோலி கோலம் போடுவது மகிழ்ச்சி உணர்வை தரும்.
அரிசி மாவைப் பயன்படுத்தி ரங்கோலி கோலம் போடப்படுகிறது. நாம் தமிழகத்தில் கோலம் என கூறுவதை வட மாநிலங்களில் ரங்கோலி என கூறுகிறார்கள். இது வண்ண மயமாக இருக்கும். இதில் வண்ண பொடிகள், அரிசி, பூ மற்றும் பிற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கோலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு வைக்கும் புள்ளி, அதை இணைக்கும் கோடுகள், டிசைனை ஆகியவற்றை போடும்போது நம் சிந்தனை ஒருநிலைப் படுகிறது. அதனுடன் நமது சிந்தனை சிதறல்களையும் இது தவிர்க்க உதவுகிறது.
நாம் தினமும் நமது விரல்களால் கோலமிடும்போது கை,விரல்களுக்கு அன்றாட பயிற்சி கிடைக்கிறது. இது நரம்பு மண்டலத்தை ஊக்குவித்து,நாள் முழுவதும் நாம் நன்றாக செயல்பட உதவுகிறது.
கோலம் போடுவது ஒரு நல்ல உடற்பயிற்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் நாம் அதிகாலை காற்றை சுவாசிக்கிறோம். காலையில் குனிந்து, நிமிர்ந்து, பெருக்கி கோலமிடுவதால் உடல் சுறுசுறுப்பாகிறது. இடுப்பு, கை, கால், முதுகு, கண்கள், விரல்கள் என அனைத்து பாகங்களும் இதனால் நல்ல நெகிழ்வைப் பெறுகின்றன.
இந்த வகையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும், நேர்மறை சிந்தனைகளையும் அளிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் மேம்படுத்துகின்றது.