Super star Rajinikanth 2020-ல் வைரல் ஆன அந்த 5 தருணங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், டிசம்பர் 3 ம் தேதி, ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தனது முடிவைப் பற்றி தெரிவித்தார். தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில், 70 வயதான நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவதாக சபதம் செய்து, தமிழகம் ஒரு “ஆன்மீக அரசாட்சியைக்” காணும் என்று கூறினார்.
‘துக்லக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, 1971 ஆம் ஆண்டில் சமூக சீர்திருத்தவாதி பெரியார் ஏற்பாடு செய்த பேரணிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். தமிழகத்தின் சேலத்தில், பெரியார் தலைமையிலான பேரணியில் ராமர் மற்றும் சீதையின் நிர்வாண சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன என்று கூறினார். அவரது கருத்து, அரசியல்வாதிகள், பொது மக்கள் என அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளானது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டது. எனினும், ரஜினிகாந்த் தன் நிலைப்பாட்டிலிருந்து மாற மறுத்துவிட்டார். தனது கூற்றுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன என்றும், உண்மையை பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறினார்.
அக்டோபர் 14 அன்று, கோடம்பக்கத்தில் உள்ள தனது ராகவேந்திர திருமண மண்டபத்திற்கான 6.50 லட்சம் சொத்து வரியை தள்ளுபடி செய்யுமாறு முறையிட்டதையடுத்து, ரஜினிகாந்த் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கோபத்தை எதிர்கொண்டார். லாக்டௌனின் போது மண்டபம் செயல்படவில்லை என்றும், எனவே சொத்து வரி செலுத்த திருமண மண்டபத்திலிருந்து வருமானம் இல்லை என்றும் அவர் கூறினார். பின்னர், நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்னர் தான் மாநகராட்சியை அணுகியிருக்க வேண்டும் என்று ரஜினி ட்விட்டரில் ஒப்புக் கொண்டார்.
ஜூலை 1 ம் தேதி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த தந்தை மகன் மரணம் குறித்து விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட்டுடன் காவல் துறையினர் நடந்துகொண்ட முறை குறித்து ரஜினி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். தந்தை-மகனின் கொடூரமான சித்திரவதை மற்றும் மரணத்திற்கு பரவலாக கண்டனம் இருந்தபோதும், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் மாஜிஸ்திரேட் முன் நடந்து கொண்ட விதம் குறித்து அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.
ஜூலை மாதம், லாக்டௌன் இருந்தபோது, ரஜினியின் ஒரு புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆனது. அதில் அவர் முகக்கவசத்தை அணிந்த வண்ணம் ஒரு லம்போர்கினியை ஓட்டிச்செல்வதை காண முடிந்தது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பாராட்டு மற்றும் விமர்சனம் இரண்டையும் பெற்றது. COVID-19 தொற்றுநோயால் நாடு முழுவதும் லாக்டௌன் உள்ள நிலையில், அவர் எப்படி நகரத்திற்கு வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.