`ராஜினாமா செய்ய தயார்...` ஷாக் கொடுக்கும் மம்தா பானர்ஜி - என்னாச்சு?

Thu, 12 Sep 2024-8:29 pm,

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கடந்த ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும், இந்த கொலையை மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள், காவல்துறையினரை பதவி விலக கோரியும் ஆர்.ஜி. கர் மருத்துவனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

30 நாள்களுக்கு மேலாக மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறி, போராடும் மருத்துவர்களை பணிக்கு திரும்பும்படி அரசு தரப்பு கேட்டுக்கொண்டது. இதற்காக போராடும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. 

 

இருப்பினும், தொடர்ந்து அழைப்பு விடுத்தும் மூன்றாவது நாளாக இன்றும் மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில் தான் இரண்டு மணிநேரம் போராடும் மருத்துவர்களை சந்திக்க தலைமை செயலகத்தில் (நபன்னா) காத்திருந்ததாகவும், ஆனால், யாரும் வரவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இன்று மட்டுமில்லை நேற்றும், மூத்த அதிகாரிகளுடன் தான் காத்திருந்ததாக மம்தா தெரிவித்தார்.

 

பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஒப்புக்கொள்ளாததால் தலைமை செயலகத்திற்கு வந்த மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராமல் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

 

இன்றைய கூட்டத்திற்கும் போராடும் மருத்துவர்கள் வராததை அடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில்,"பெரும்பாலான மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு சிலரே இதற்கு முட்டுக்கட்டைப் போட விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது" என மறைமுகமாக எதிர்க்கட்சிகளை தாக்கி பேசி உள்ளார். 

 

மேலும் அவர்,"சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகவும் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் நீதியை விரும்பவில்லை. அவர்களுக்கு நாற்காலி தான் வேண்டும்" என சாடி உள்ளார். மேலும், பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் சில சட்டசிக்கல்கள் அதில் இருப்பதால்தான் மறுக்கிறோம் என்றும் விளக்கியுள்ளார். 

 

மம்தா பானர்ஜி இதுதொடர்பாக,"வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியமான ஆவணப்படுத்தலுக்காக பேச்சுவார்த்தையை பதிவு செய்வதற்கான முழு அமைப்பும் எங்களிடம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் அந்த பதிவைப் பகிரவும் நாங்கள் தயாராக இருந்தோம். ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கின் நுணுக்கங்களை நாம் விவாதிக்க முடியாது. அதனால்தான், பேச்சுவார்த்தையை பதிவு செய்ய மட்டும் ஏற்பாடு செய்தோம்" என்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link