இரத்தம் தோய்ந்த முகம், பீதி கலந்த பார்வை: உக்ரைனிலிருந்து வரும் பரிதாப படங்கள்
மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைனைத் தாக்கியது. வியாழன் காலை 5 மணிக்கு ரஷ்ய அதிபர் புதின் போர் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் தாக்க ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. டெய்லி ஸ்டார் செய்தியின்படி, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புதின் 'சிறப்பு இராணுவ நடவடிக்கை' பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் விடுத்த போதிலும், உக்ரைனின் தாக்குதலில் குறுக்கிட முயற்சிக்கும் உக்ரைனின் நட்பு நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்ய இராணுவம் ஏவுகணைகளை வீசி அந்நாட்டின் தெற்கு கடற்கரையில் துருப்புக்களை தரையிறக்கியுள்ளது.
உத்தியோகபூர்வமற்ற ரஷ்ய ஆதாரங்கள், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழித்து வருவதாகக் கூறுகின்றன.
அதிகாலை 4.35 மணிக்குப் பிறகு போர் வெடித்தவுடன், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனடியாக அனைத்துப் பகுதிகளிலும் இராணுவச் சட்டத்தை அறிவித்தார். உக்ரைனின் தலைநகரான கியேவிலிருந்து மக்கள் தப்பிச் செல்லும் கார்கள் உட்பட, அங்கிருந்து அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளிவந்துள்ளன.
வியாழன் காலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 3 மணிக்கு) புதின் தனது தொலைக்காட்சி உரையை முடித்த சில நிமிடங்களில் உக்ரைன் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன.
இரத்தம் தோய்ந்த முகத்துடன் பரிதாபமாக இருக்கும் ஒரு ரஷ்ய பெண்ணின் படம் ஒன்று சோகத்தை ஏற்படுத்துகிறது.
மற்றொரு புகைப்படத்தில் ரஷ்ய தாக்குதலில் உயிர் இழந்த ஒருவரது உடல் அருகில் மற்றொருவர் மிகுந்த சோகத்துடன் இருப்பதைக் காண முடிகின்றது. ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் மக்கள் அலை மோதுகின்றனர். மக்கள் வாழ்வாதாரங்களையும் சொத்துக்களையும் விட்டு விட்டு தப்பி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.