சளி தொல்லை தாங்க முடியலையா? ‘இந்த’ சிம்பிள் வைத்தியங்களை செய்து பாருங்கள்..
பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது உடலும் மாறுவது சகஜம். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இருந்து மழை காலம் மாறினாலும், மழை காலத்தில் இருந்து குளிர் காலம் மாறினாலும் உடனே காய்ச்சல், சளி வந்து விடும்.
கால நிலை மாற்றங்களுக்கான வறையரை அன்றி, அனைத்து காலங்களிலும் சளியோ காய்ச்சலோ வந்து விடும். ஒரு சிலர் இதனுடனே வாழ பழகி விடுவர். இதில் இருந்து விடுபட பல்வேறு வழிகள் இருந்தாலும், ஒரு சில வீட்டு வைத்தியங்கள் இதற்கு உடனடி நிவாரணியாக செயல்படுகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்தல் : சுடுதண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது, நமது பாட்டி காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் வீட்டு வைத்தியமாகும். தொண்டை வலி, சளி தொல்லைக்கு இதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பலர் பரிந்துரைப்பதுண்டு.
ஹெர்பல் பானம்: தேன், மிளகு, துளசி ஆகிய உணவு பொருட்களில் தொண்டை புண்ணை ஆற்றும் ஆற்றல் மிகுந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருக்கின்றன. இதனால், இவை சேர்த்த பானத்தை குடித்தால் உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது என பெரியவர்கள் கூறுவர்.
மஞ்சள் தண்ணீர்: அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட உணவு பொருட்களுள் ஒன்று, மஞ்சள். தண்ணீரை கொதிக்க வைத்து இதனுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மூக்கடைப்பு, சளி தொல்லை நீங்கும் என கூறப்படுகிறது.
சூடான சூப்: சளியினால் தும்மல், இருமல் தொல்லை அதிகரித்து மூக்கடைத்து இருக்கும் வேளையில் ஹெல்தியான/சூடான சூப் குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும். அந்த சூப்பில் மிளகு, காய்கறிகள் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பு.
யூகலிப்டஸ் எண்ணெய்: யூகலிப்டஸ் மரங்களில் இருந்துதான் எடுக்கப்படும் எண்ணெயை நம் ஊரில் “நீலகிரி தைலம்” என குறிப்பிடுவோம். இவை, சளி தொல்லையில் இருந்து சிறிது நேரங்களுக்கு விடுபட உதவும் என உபயோகித்தவர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)