ஆந்திரா - பீகாருக்கு அள்ளி கொடுத்த பாஜக... நிதிஷ் - சந்திரபாபுவை கலாய்க்கும் மீம்ஸ்கள்!
2024-25 நிதியாண்டின் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு புத்தம்புது அறிவிப்புகள், சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை மையப்படுத்தியே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த பட்ஜெட்டில் குறிப்பிட வேண்டிய முக்கியமானது என்றால், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள்தான். ஆந்திராவுக்கும் பீகாருக்கும் மட்டும் நிதி ஒதுக்கீடு அதிகமாக இருந்ததை தொடர்ந்து நெட்டிசன்கள் இதனை விமர்சித்து வருகின்றனர். அதுசார்ந்த மீம்ஸ்களை இங்கு தொடர்ந்து காணலாம்.
ஆந்திராவின் வளர்ச்சிக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் அமராவதியை கட்டமைப்பதற்காக மத்திய அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் ஆந்திராவின் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கனவுத்திட்டமான போலவரம் அணை திட்டம் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பீகாரிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சாலை கட்டமைப்பு திட்டங்கள், நெடுஞ்சாலை திட்டங்களுக்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் பக்சர் நகரில் கங்கையின் மீது புதிய இருவழிப் பாலமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு திட்டங்களும் பீகார் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, பீகாருக்கு இத்தனை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்களும் இருக்கின்றன. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்துள்ள ஆந்திராவை ஆளும் தேசிய தெலுங்கு தேசம் கட்சி 16 எம்.பி.க்களையும், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 12 எம்.பி.க்களையும் என மொத்தம் 28 உறுப்பினர்களை வைத்திருக்கின்றன.
இந்த இரு கட்சிகளே பாஜக ஆட்சியின் தூண்களாக விளங்குவதால், அக்கட்சிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை ஏற்கப்படவில்லை.
எனவேதான், இந்த இரு மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் நெட்டிசன்களால் நகைப்புக்கு உள்ளாகி உள்ளது. அரசியல் ரீதியில் பாஜக ஆளாத மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றன.