தமிழக மக்களே உஷார்?.. HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
பெங்களூருவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் (Human Metapneumovirus) பாதிப்பு கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. HMPV வைரஸ் பற்றி தமிழக அரசு என்ன சொல்லி இருக்கிறது? HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகள், அதாவது மூன்று மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை இருவருக்கு HMPV என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு, அங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பி இருப்பதாகவும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் HMPV வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வகையான தொற்று நோய் காற்றில் பரவக்கூடியது என்றும், கொரோனா தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த HMPV வைரஸ் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் எனவும், மேலும் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா தொற்று போலவே இது அதே பாதிப்பை உண்டாக்கக்கூடிய வைரஸ் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
HMPV வைரஸ் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மற்றும் தொற்று ஏற்பட்டால் சமாளிக்க முழு தயார் நிலையில் மருத்துவமனைகள் உள்ளன என இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் HMPV வைரஸ் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லையோர பகுதிகளில் HMPV வைரஸ் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்திலிருந்து வரக்கூடிய பேருந்துக்கள் மற்றும் சாலையோரங்களில் வரக்கூடியவர்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு HMPV வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்களை உடனடியாக கண்டறியப்பட்டு, அந்தந்த மாவட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய பொது சுகாதாரத்துறை மூலமாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல் இந்த HMPV வைரஸ் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், இதே போல வைரஸ் பல்வேறு நாடுகளில் இருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகள் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அண்டை மாநிலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். எனவே யாரும் பீதி அடைய வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.