தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இப்போது கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு, காணொளி காட்சி மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. 752 கோயில்களில் ஒருவேளை அன்னதானம் கொடுக்கப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் நாள் முழுவதும் வழங்க விரிவுபடுத்தப்பட்டது.
இப்போது மதுரை அழகர் கோயில், கோயம்புத்தூர் மருதமலை ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதேபோல், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஏற்கனவே தொடங்கி வைத்திருந்தார். இப்போது அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் ஒரு பள்ளி மற்றும் நான்கு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பழனியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் மட்டுமே இருந்த காலை மற்றும் மதிய உணவு திட்டங்கள் இன்று முதல் கல்லூரிகளிலும் அறிமுகமாகியுள்ளது.