பொங்கல் 2025 | ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு... இன்றே வருது 1000 ரூபாய்!
1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் மாதாமாதம் ரூ.1000 தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு அரசு ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,"தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ள திட்டம், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில்,"எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைவருக்கும் இன்றே அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவுவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, மக்களின் நலன் கருதி முன்கூட்டியே இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அன்றுதான் இதன் பயனாளர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை ரேசன் கடைகளின் மூலம் 2.2 கோடி ரேசன் அட்டைத்தாரர்களுக்கு இன்று முதல் ஜன.13ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.