போலியாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை.. அரசு போட்ட ஒரே கண்டிஷன்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரேஷன் கார்டு வைத்திருந்தால் தான் அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியும். இதற்காகவே பலர் போலியாக விண்ணப்பங்களை கொடுத்து ரேஷன் கார்டுகளை பெறுகின்றனர்.
அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட எண்ணற்ற அரசின் சேவைகளுக்கு பிரதானமாக ரேஷன் கார்டு இருக்கிறது.
இந்த சலுகைகளை பெறுவதற்காகவே பலர் போலியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்று முறைகேடாக அரசின் சலுகைகளை பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரண்டு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் களைய அரசு மிகப்பெரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அதில் ஒன்று தான் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அரசு போட்டிருக்கும் கண்டிஷன். அதாவது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் எல்லாம் அவ்வளவு சாதாரணமாக குடும்ப அட்டை பெற்றுவிட முடியாது.
திருமணமான புதிய தம்பதிகள் என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்றால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இருவரும் ஆவணத்தை சமர்பித்தால் மட்டுமே ரேஷன் கார்டு விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அதுமட்டுமல்லாமல் திருமணம் பதிவுச் சான்றிதழ் காண்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வீட்டு ரசீது அல்லது மின் கட்டண எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஆவணமாக கொடுக்க வேண்டும்.
இத்தனை ஆவணங்களை கொடுத்தபிறகும் ரேஷன் கார்டு தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக வந்து நீங்கள் கொடுத்த ஆவணத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்வார்.
அதில் ஆவணங்கள் அனைத்தும் உண்மை என தெரிந்த பிறகே ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பிறகு உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக கொடுக்கப்படும்.
போலி ரேஷன் கார்டு, இரண்டு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பது ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும். தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மூலம் இனி யாரும் போலி ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.