திருப்பதி குலசேகர ஆழ்வார் படி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?
திருப்பதியில் கருவறைக்கு முன்பு இருக்கும் படியின் பெயர் தான் குலசேகர ஆழ்வார் படி. அந்த படிக்கு ஏன் இவர் பெயர் வந்தது? என்பதன் பின்னணியில் மிகப்பெரிய வரலாற்று தகவல் இருக்கிறது. சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர்.
பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் குலசேகரர் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர். சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.
குலசேகரர் திருமாலின் அடியார்கள்மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி?. எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.
ஆனால், அமைச்சர்களின் சூழ்ச்சியை அறிந்து கொண்டு மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார். முதலில் திருவரங்கம் சென்றார். திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம்.
பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார். தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார்.
திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார்.
இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.
இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை.
ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார், இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார்.
அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார், வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர். இன்றும் எல்லா பெருமாள் கோவில்களிலும் இருக்கும் முதல் படியை குலசேகர ஆழ்வார் படி என்றே அழைப்பார்கள்.