விஜய் ஹசாரே: மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி..!

Mon, 11 Dec 2023-9:13 pm,

விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி சுற்றில் லீக் சுற்றின் ஏ புள்ளி பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த மும்பை மற்றும் ஈ பிரிவில் 2ஆவது இடம் பிடித்த தமிழ்நாடு அணிகள் மோதின.

 

ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணியின் சக்சேனா ஆரம்பத்திலேயே முகமது சித்தார்த் வேகத்தில் டக் அவுட்டானார். 2ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தோமர் 24 ரன்களில் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். 

 

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் அஜிங்கிய ரஹானே ஒரு ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் பிஸ்தா 37 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.இதனால் அந்த அணி 92/4 என தடுமாறிய மும்பைக்கு மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரர் ஷிவம் துபே 1 பவுண்டரி 4 சிக்சருடன் 45 ரன்களும்,  பவார் 59 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தனர். 

 

இருப்பினும் 48.3 ஓவரிலேயே மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இதைத்தொடர்ந்து 228 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தமிழக அணிக்கு ஜெகதீசன் - பாபா அபாரஜித் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 

 

அதன்பின்னர் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதானமாக விளையாடிய அவருடைய சகோதரர் பாபா அபாரஜித் 2ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 45 ரன்கள் குவித்து அவுட்டானார்.

 

அவரை தொடர்ந்து வந்த ராஜகோபால் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினாலும் அடுத்ததாக வந்த விஜய் சங்கர் தம்முடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இறுதியில் பாபா இந்திரஜித் அதிரடியாக 11 பவுண்டரியுடன் சதமடித்து 103 ரன்களும், விஜய் சங்கர் 51  ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

 

இதன்மூலம் தமிழ்நாடு அணி  43.2 ஓவரிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று வலுவான மும்பையை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று அசத்திய தமிழ்நாடு வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள முதல் செமி ஃபைனலில் ஹரியானாவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link