சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே
நாம் கவனிக்க வேண்டிய முதல் மாற்றம் எல்பிஜி சிலிண்டர் விலை. எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை புதுப்பிக்கின்றன. முன்னதாக மே மாத தொடக்கத்தில், எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்தன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலைகள் ஜூன் 1, 2024 அன்று புதுப்பிக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்ட வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்களில் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். எனினும் இந்த வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். ஆகையால் வங்கிக்குச் செல்வதற்கு முன் விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நீங்கள் இன்னும் உங்கள் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால், இந்த அப்டேட் உங்களுக்கு மிக முக்கியமானது. UIDAI, ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான காலக்கெடுவை ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் எளிதாக புதுப்பிக்கலாம். ஆனால், ஆஃப்லைனில் அப்டேட் செய்தால், அதாவது ஆதார் மையத்திற்குச் சென்று புதுப்பித்தால், ஒரு அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
புதிய ஓட்டுநர் உரிம விதிகள் (New Driving License Rules 2024) அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருவதால் ஜூன் 1 முதல் போக்குவரத்து விதிகளும் மாற்றப்பட உள்ளன. புதிய விதிகள் கடுமையானவையாக இருக்கும். மேலும் இவற்றில் விதிக்கப்படும் அபராதமும் அதிகமாக இருக்கும்
புதிய விதியின்படி, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
சாலை விபத்துகளை குறைக்கும் முயற்சியாகவும், ஒழுங்குமுறைகளை நிலைநாட்டும் விதமாகவும் வாகனம் ஓட்டும் வயதை எட்டாத மைனர் வாகனம் ஓட்டினால் 25000 ரூபாய் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இப்படி செய்யும் மைனர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறும் தகுதியை இழந்து விடுவார். புதிய ஓட்டுநர் உரிம விதிகள் 2024ன் கீழ் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் நபர்கள் இனி ஓட்டுநர் சோதனைகளை (Driving Tests) அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான ஆர்டிஓ-களில்தான் (Government Regional Transport Offices - RTOs) செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. இதற்கு பதிலாக தனியார் பயிற்சி மையங்களிலும் இனி டிரைவிங் செஸ்ட் செய்யலாம். இந்த தனியார் மையங்கள் சோதனை நடத்தி தேவையான சான்றிதழ்களை வழங்க சான்றளிக்கப்படும்.
இவை தவிர இந்த மாத இறுதிக்குள், அதாவது மே 31-க்குள் செய்து முடிக்க வேண்டிய ஒரு முக்கிய பணியும் உள்ளது. இன்னும் ஆதார் அட்டையை பேன் அட்டையுடன் இணைக்காதவர்கள் அதை மே 31-க்குள் செய்து முடிக்க வேண்டும். மே 31 காலக்கெடுக்குள் இதை செய்யத் தவறினால், பொருந்தக்கூடிய விகிதத்தில் இருமடங்கு டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை (Income Tax Department) எச்சரித்துள்ளது.
ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் இந்த முக்கிய விதிகளை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் பணிகளை திட்டமிடுவது நல்லது. இதன் மூலம் தேவையற்ற இன்னல்களையும், தாமதங்களையும், பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.