இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் ஒருமுறை டி20 உலக கோப்பையில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது. இது ரோகித் சர்மாவின் 9வது டி20 உலக கோப்பை தொடராகும்.
கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.
ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் வெற்றி வாகை சூடியிருந்தது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது.
அதன்பிறகு நடைபெற்ற பல டி20 உலக கோப்பையில் இந்திய அணி பங்கேற்று இருந்தாலும், ஒரு முறைகூட சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமே 20 ஓவர் உலக கோப்பையை இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது.
இம்முறை அந்த வரலாற்றை மாற்றி அமைக்கும் நோக்கத்தோடு இந்திய அணி அமெரிக்கா சென்றிருக்கிறது. ஆனால், விராட் கோலி இன்னும் நியூயார்க் செல்லவில்லை. அதனால் அவர் எப்போது அமெரிக்கா செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களில் இதுவரை இந்திய அணியுடன் இணையாத பிளேயர்களில் விராட் கோலி, ரிங்கு சிங் மட்டுமே இருக்கின்றனர். இருவரும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்திய அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலிக்கு பேப்பர் வொர்க் இன்னும் பெண்டிங் இருந்ததால் அவரால் இந்திய அணியுடன் செல்ல முடியவில்லை. இதற்கான வேலைகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்பதால், அதன்பிறகு செல்ல இருக்கிறார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடியதால் இந்தியாவில் இருந்த ரிங்கு சிங்கும், விராட் கோலியுடன் இணைந்து அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.