தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் வீர தமிழச்சியின் கட் அவுட்! யார் இந்த அஞ்சலை அம்மாள்?
வெள்ளையனிடம் அடிமையாக கிடந்த நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்டதில், பெண்களின் பங்கு கணிசமானது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் அஞ்சலையம்மாளும் ஒருவர். கடலூரில் 1890-ம் ஆண்டு பிறந்தவர் தான் அஞ்சலையம்மாள்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படிக்க முடிந்த அஞ்சலையம்மாள், தன் நாட்டின் மீது பற்று கொண்டவர். வெள்ளையர்களின் கொடுமைகளை பார்த்து கோபமடைந்த அவர், மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்டபோது, அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார். அதுவே சுதந்திரத்துக்காக அவர் தொடர்ந்த முதல் பயணம்.
சிப்பாய் கலகத்தில் இந்திய விடுதலைக்காக போராடியவர்களை கொலைச் செய்ய காரணமாக இருந்த நீலன் சிலை சென்னையில் இருந்தது. அதை அகற்றுவதற்காக சோமயாஜீலு தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார் அஞ்சலையம்மாள்.
தனது ஒன்பது வயது மகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டு பலரையும் அசர வைத்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மகளுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்றார். சிறையைக் கண்டு அஞ்சாதவராய் தன் மகளை தைரியமாக வளர்த்தார்.
1932-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால், கைதாகி, சிறைச் சென்றார். வேலூர் சிறைக்குள் கால் வைத்த போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறைக்குள் கடும் வேதனையை அனுபவித்தார்.
பிரசவத்துக்காக பரோல் மூலம் வெளியே வந்தார். குழந்தை பிறந்த இரண்டு வாரங்களில் கைக்குழந்தையுடன் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்றவர் தான் அஞ்சலையம்மாள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படிப்பட்ட வீர தமிழச்சியின் கட் அவுட் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் இடம் பெற்றிருப்பது தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் கட் அவுட்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் கட் அவுட்களும் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.