சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப் பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவரை நீக்க வேண்டும் என பாமக சார்பில் வரும் 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-



சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப் பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் பினாமி அரசு இந்த நியமனத்தை வெட்கமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டிருப்பதை கண்டும் காணாமலும் தமிழக அரசு பதுங்கி, ஒதுங்குவது கண்டிக்கத்தக்கது.


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது முழுக்க முழுக்க தமிழகம் மற்றும் அதன் கல்வியாளர்களின் தன்மானம் சார்ந்த விஷயமாகும். சூரப்பா ஆகச் சிறந்த கல்வியாளர் என்றும், அவரால் தான் சீரழிந்த அண்ணா பல்கலைக்கழகத்தை சீரமைக்க முடியும் என்றும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இவை இரண்டுமே வடிகட்டிய பொய்யாகும்.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்களாக இருந்தவர்கள் ஊழல்வாதிகளாகவும், திறமை இல்லாதவர்களாகவும் இருந்தனர் என்பது உண்மை தான். ஆனால், அதனால் அண்ணா பல்கலையின் தரம் குறைந்துவிடவில்லை. காரணம் வா.செ. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், கலாநிதி, பாலகுருசாமி போன்ற முன்னாள் துணைவேந்தர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் நடப்பாண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சிறந்த பல்கலைக்கழகங்களில் 4-ஆவது இடம், பொறியியல் கல்வி நிறுவனங்களில் 8-ஆவது இடம், அனைத்துக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த சாதனைக்கு காரணமானவர்கள் சூரப்பாக்கள் அல்ல.... தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேநேரத்தில் சூரப்பா இயக்குனராக பதவி வகித்த பஞ்சாப் இந்தியத் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் பொறியியல் கல்வி நிறுவனங்களில் 22-ஆவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. அனைத்துக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்த நிறுவனம் முதல் 200 இடங்களுக்குள் வர முடியவில்லை. இதுதான் சூரப்பாவின் சாதனை. இவரைத் தான் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு கூட்டம் தூக்கிப் பிடிக்கிறது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் தமிழகத்தில் இருக்கும் போது அவர்களை புறந்தள்ளிவிட்டு, இல்லாத தகுதியை இருப்பதாகக் காட்டி ஒரு கன்னடரை தமிழகத்தின் பெருமைக்குரிய உயர்கல்வி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் திணிப்பதை மன்னிக்கவே முடியாது. இத்தகைய தருணங்களில் முதல் எதிர்ப்பு தமிழக முதலமைச்சரிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்ப்பும் வரவில்லை.


மாறாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கும், தமிழக அரசுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறி தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. பெரியளவில் எந்த அதிகாரமும் இல்லாத யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் கூட தங்களின் அதிகார வரம்பில் ஆளுனர்கள் குறுக்கிட்டால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். ஆனால், நமது முதல்வர் ஆளுனரிடம் சரணாகதி அடைந்து விடுகிறார். இது அவமானம்.


தமிழகத்தின் அடையாளமான அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்பில் கன்னடர் அமர்வதை அனுமதிக்கவே முடியாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை ரத்து செய்து அவரை கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தகுதியுள்ள தமிழர் ஒருவரை புதிய துணைவேந்தராக நியமிக்க வேண்டும்.


இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை மறுநாள் (09.04.2018) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகிப்பார். கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறுத் தரப்பினரும் இத்தொடர்முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பர்.


இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.