முன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒருவர் போட்ட பதிவை தாம் தவறாக பகிர்ந்து விட்டதாகவும், அதற்காக அனைத்து பெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து அவர் மீது தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


இதையடுத்து எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவரின் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதால் எஸ்.வி.சேகர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 


இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி.சேகர். கலந்து கொண்டார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 


இந்த நிலையில், போலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மைதான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், அவர் தேடப்படும் குற்றவாளி என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவரை கைது செய்ய வேண்டியது காவல் துறையின் வேலை என் வேலை அல்ல என்று கருத்து தெரிவித்தார்.