பாஜக அரசு மக்களுக்காக உத்வேகத்துடன் பணியாற்றும்: மோடி ட்வீட்!
மத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி..!
இந்திய மக்களுக்காக, தொடர்ந்து உத்வேகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மத்திய அரசு பணியாற்றும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் ஆதரவால் தான் மத்திய அரசு வலிமையோடு செயல்படுவதாகவும், அரசு மீது அவர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தனது தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தங்களை பொறுத்தவரை இந்தியாவுக்கே முதன்மை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முடிவுகளை சிறந்த நோக்கம் மற்றும் நேர்மையுடன் தாங்கள் எடுத்திருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.