இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இரவீந்தரநாத் தாகூர்!
புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூரின் 158-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கல்கத்தாவைச் சேர்ந்த இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ல் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.
இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வம்சம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவ