SC, ST வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் 3-ந் தேதி விசாரணை!
எஸ்.சி., எஸ்.டி வழக்கு குறித்து மறு ஆய்வு மனுக்களை மே 3-ந் தேதி விசாரணைக்கு உத்தரவு!
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக 20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.
அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி.) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை வழக்கு பதிவு செய்த உடனேயே கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என கருத்துக்கள் எழுந்தன. வட மாநிலங்களில் போராட்டங்கள் பெரியளவில் நடந்தது. அதைத் தொடர்ந்து தீர்ப்பின்மீது தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும், மத்திய அரசும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் ஏ.கே. கோயல், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜர் ஆனார். அவர் மறு ஆய்வு மனுவின்மீது மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துவிட்டதால், விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மறு ஆய்வு மனுக்களை மே 3-ந் தேதி விசாரணை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.