மரம் வளர்போம் மழை பெறுவோம்!! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்
ட்வீட்டரில் மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவிற்கு ஜோலார்பேட்டை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய அனைத்து கோயில்களிலும் அதிமுகவினர் மழை வேண்டி சிறப்பு யாகம் கூட செய்தனர். ஆனாலும் தண்ணீர் பஞ்சம் தீரவில்லை.
இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்வீட்டரில் மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.