பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தமிழக அரசை சாடிய கமல்ஹாசன்!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக ஆசைவலையில் விழவைத்து, நம்பவைத்து ஏமாற்றி தனியாக அழைத்து சென்று அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் கதறக்கதற பாலியல் வன்கொடுமை செய்து நாசமாக்கி, அந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து, அதைக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அவர்களை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர் ஒரு கும்பல்.
இந்நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை ஒரு ஆடியோ பதிவில் கேட்டதாகவும், அதை கேட்டு தனது நெஞ்சம் பதறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்பயா விவகாரம் நாட்டையே உலுக்கிய போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாலியல் குற்றங்களை கொடூர குற்றங்களாக கருத வேண்டுமென கூறியதை குறிப்பிட்டு, "அவர் பெயரில் ஆட்சி செய்பவர்களால் எப்படி இவ்வாறு மெத்தனமாக இருக்க முடிகிறது" என்றும் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.