டெல்லி: திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி இருவருக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பாஜக ஆட்சியில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படாமல் காலாவதியானதால், இந்தமுறை மீண்டும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது கடந்த ஜூலை 25-ஆம் நாள் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. பின்னர், திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.


இதனையடுத்து நேற்று திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்து வந்தனர். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக கூட முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்தது.


கடும் எதிர்ப்புக்கிடையே, இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக அதிக அளவில் கிடைத்ததால் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு இது சட்டமாகும்.


இந்த மசோதா நிறைவேறியதை நாடு முழுவதும் கொண்டப்பட்டாலும், பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதாவது இந்த மசோதாவை எதிர்த்து பல கட்சிகள் வெளியேறியது. அதிமுக, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஜம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி உட்பட இன்னும் சில கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இதுப்போன்ற நிகழ்வுகள் இந்த மசோதா நிறைவேற இதுவும் ஒருக்காரணமாக அமைந்தது.


இதை மேற்கோள்காட்டி, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், மெஹபூபா முப்தி அவர்களே.. முத்தலாக் சட்டம் வாக்கெடுப்ப நடந்தபோது உங்கள் கட்சி எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்பதை உறுதி செய்து விட்டீர்களா? வாக்கெடுப்பை புறக்கணிப்பதும் ஒருவகையில் சட்டம் நிறைவேற ஆதரவளிப்பது தான். இதன் மூலம் நீ்ங்கள் அரசுக்கு உதவி செய்துள்ளீர்கள். சட்டம் நிறைவேற உதவி செய்துள்ளீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதில் அளித்த மெஹபூபா முப்தி, முத்தலாக் தடை சட்டம் என்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றமே தெரிவித்து விட்டது. முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய தேவையே இல்லை. இது தேவையற்ற குறுக்கீடு. முஸ்லிம்களை தண்டிப்பதாக இருக்கிறது. எது முக்கியமோ அது கவனிப்போம் எனக் கூறியுள்ளார். 


மற்றொரு ட்வீட்டில், உமர் சஹாப், 1999 ல் பாஜகவுக்கு எதிராக வாக்களித்ததற்காக உங்கள் சொந்தக் கட்சியை சேர்ந்த சோஸ் சஹாப்பை வெளியேற்றியது என்பதை மறந்துவிட்டீர்களா.. அதனால் வாக்களிக்காமல், எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் எனக் கூறியுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள உமர் அப்துல்லா, மேடம், இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை காட்டி, தங்கள் கட்சியின் போலித்தனத்தை பாதுகாக்க நீங்கள் செய்தது சிறந்தது என்று விவரிக்கிறீர்களா? எனவே உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநடப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறீர்கள். எந்தவொரு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும் கூட சட்டம் நிறைவேற உதவி செய்வது தானே. அப்படி பார்த்தால் நீங்கள் பாஜகவுக்கு உதவி செய்துள்ளீர்கள் எனக் கூறியுள்ளார்.