ஜனநாயகம் வென்றது `டெல்லியில் அரசுக்கு அதிகாரம்` -கெஜ்ரிவால்
டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகம் வென்றுள்ளதாக அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகம் வென்றுள்ளதாக அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில், ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கினர்.
அதில், ’டெல்லியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவு ஆரோக்கியமாகவே உள்ளது. துணை நிலை ஆளுநர் மாநில அரசுடன் சேர்ந்து சுமுகமாகச் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகள்மீது ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் “டெல்லி மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது, ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இது ஒரு மைல்கல். டெல்லி அரசு, இனி எந்தக் கோப்புகளையும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்ககாக அனுப்பிவைக்காது. இனி எந்த வேலை நிறுத்தமும் நடைபெறாது. இது, ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உச்ச நீதிமன்றத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.