FIFA_2018: ஸ்வீடனை கடைசி நிமிடத்தில் வென்ற ஜெர்மனி!
டோனி க்ரூஸ் அடித்த கடைசி நிமிட சூப்பர் கோல் மூலம் நடப்பு சாம்பியன் ஜெர்மனி நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், ஸ்வீடனை வீழ்த்தியது!
டோனி க்ரூஸ் அடித்த கடைசி நிமிட சூப்பர் கோல் மூலம் நடப்பு சாம்பியன் ஜெர்மனி நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், ஸ்வீடனை வீழ்த்தியது!
FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறும்.
கடந்த முறை உலகக் கோப்பையை வென்று அசத்திய ஜெர்மனி அணி, இந்த முறை தொடக்க போட்டியிலேயே ஆட்டம் கண்டது. சிறப்பாக விளையாடிய மெக்சிகோவுடன் 1-0 என ஜெர்மனி தோற்றது. ஜெர்மன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த போட்டியை தொடர்ந்து, அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது.
இதையடுத்து, ஸ்வீடனுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஜெர்மனி திணறியது. போட்டியின் முதல் நிமிடம் முதல் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது நிமிடத்திலேயே அருமையான வாய்ப்பை உருவாக்கியது ஜெர்மனி. ஆனால், முதல் கோல் அடித்ததோ ஸ்வீடன் தான். 32வது நிமிடத்தில், ஸ்வீடன் மின்னல் வேகத்தில் செய்த கவுன்ட்டர் அட்டாக்கின் முடிவில் டோய்வோனென் கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த போட்டியிலும் தோற்றால், ஜெர்மனி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் விளிம்புக்கு செல்லும் நிலையில், முதல் பாதி 1-0 என முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் ஜெர்மனி அட்டாக் செய்தது. அதன் பலனாக இரண்டாவது பாதி துவங்கி மூன்றே நிமிடங்களில், ஜெர்மனியின் மார்க்கோ ரியூஸ் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இறுதி கட்டத்தை நெருங்கிய போது, ஜெர்மனி வீரர் போட்டெங் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். 10 வீரர்களை கொண்டு விளையாடினாலும், தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. 90+4-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், அந்த அணியின் டோனி க்ரூஸ், கோல் அடித்து கடைசி நிமிட வெற்றியை ஜெர்மனிக்கு பெற்றுத் தந்தர்.