புது டெல்லி: COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த  மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், அதிக பணப்புழக்கம் இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது பதிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என்று சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் லாக்-டவுன் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பி.சி.சி.ஐ (BCCI) காத்திருக்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தை நீட்டித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளை நிர்வாகம் மேலும் ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.


நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நாவல் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 259 இறப்புகளுடன் 8000 ஐ தாண்டியுள்ளது.


எவ்வாறாயினும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன்னர் IPL தொடரை ஒத்திவைப்பை குறித்து BCCI வாரியம் முறையாக அறிவிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


"பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளன. இதனால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஆனால் அது நிச்சயமாக ரத்து செய்யப்படாது. இது காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம்" என்று பெயர் கூறவிரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. (PTI) செய்தி ஊடகத்திடம் கூறியுள்ளார்.


ஐபிஎல் முதலில் மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்ததால் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது.


"ஐபிஎல் ரத்து செய்ய முடியாது. ஏனெனில் இதனால் ரூ .3000 கோடி இழப்பு ஏற்படும். பி.சி.சி.ஐ அனைத்து பங்குதாரர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதேநேரத்தில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த குறிப்பிட்ட இடத்தில், நேரத்தில் தான் ஐபிஎல் போட்டிகள் நிகழக்கூடும் என்று பிசிசிஐ நிர்வாகிகள் உறுதிப்படுத்த முடியாது" என்று அவர் கூறினார்.


இப்போதைக்கு, இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலக டி-20 க்கு முன்பு அதை ஏற்பாடு செய்தல் அல்லது டி-20 உலக கோப்பை நடத்தும் ஐ.சி.சி, ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் பிற பங்குதாரர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே உலக கோப்பை தொடரின் போதே அதை நடத்துதல்.


இந்த நேரத்தில் உலகம் முழுவதும் நிலைமை சரியாக இல்லை. விஷயங்கள் இயல்பானதாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்த முடியும். அதுவரை எதுவும் சொல்ல முடியாது என்றார்.