ISL கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பெங்களூரு கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 


இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடினர். இதனையடுத்து ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற கோவா வீரர் அகமது ஜாஹோ வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.


இந்த பரபரப்பான சூழலில் ஆட்டத்தின் 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து கோவா கோல் கீப்பர் நவீன்குமாரின் கையில் பட்டு வலைக்குள் தெறித்து விழுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. 


ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக ISL கோப்பையை தட்டிச்சென்றது. அதேவேலையில் கோவா அணி 2-வது முறையாக இறுதி சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.


வெற்றி வாகை சூடிய பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.